search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தரிசனம் அனுமதி"

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவிற்காக கடந்த 8 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து வகையான தரிசனங்களும் இன்று காலை முதல் மீண்டும் தொடங்கியது. #Tirupati
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகம விதிகளின்படி, அஷ்டபந்தன பாலாலய மகா சம்ப் ரோக்‌ஷணம் எனப்படும் மகா கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது.

    இதனை தொடர்ந்து, மாலை 5 மணிக்கு, கருட பஞ்சமியையொட்டி, உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பசாமி கருட வாகனத்தில் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை தொடர்ந்து, இரவு 9 மணியளவில், பெரிய சே‌ஷ வாகனத்தில், மீண்டும் உற்சவ மூர்த்திகள் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இத்துடன் கும்பாபிஷேக விழா நிறைவு பெற்றது.

    கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 9-ந் தேதி முதல் நடைபாதை தரிசனம், சிறப்பு தரிசனம், ரூ.300 கட்டண தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இலவச தரிசனத்தில் மட்டும் குறைந்த அளவிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 8 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து வகையான தரிசனங்களும் இன்று காலை முதல் மீண்டும் தொடங்கியது.


    நள்ளிரவு 12 மணி முதல் நடைபாதை, இலவச தரிசனம் நேரம் குறித்த அட்டை ஆகியவை வழங்கப்பட்டது. கோவிலில் நடைபெறும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் வழக்கம்போல் நடைபெற்றது.

    இது தொடர்பாக தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆகம ஆலோசனைக் குழு அளித்த ஆலோசனைகள் மற்றும் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் சுவாமிகள் அறிவுறுத்தலின்படி மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடந்தது.

    எங்களது வேண்டுகோளுக்கு இணங்க ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கர்நாடகா மற்றும் இதர மாநில பக்தர்கள் மிகுந்த ஒத்துழைப்பு அளித்தமைக்கு நன்றி. 44 வேத வல்லூநர்கள், 100 வேத பண்டிதர்கள் பங்கேற்று இதனை சிறப்பாக நடத்திக் கொடுத்துள்ளனர். கடந்த 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 1.34 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துள்ளனர். இன்று காலை முதல் பக்தர்கள் வழக்கம்போல் ஏழுமலையானை தரிசிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tirupati #TirupatiTemple
    ×